Aspect Ratio - படமாக்கல் மற்றும் திரையிடல் - அளவு விகிதம்

09:47:00



படமாக்கல் மற்றும் திரையிடல் - அளவு விகிதம் (Aspect Ratio)

திரைப்படக்கலை உருவான ஆரம்பகட்டங்களிலேயே படமாக்குவதற்கும் அதை திரையிடுவதற்கும் அளவுகோள் ஒன்றை உருவாக்கினர். இந்த அளவுகோலானது அகலம் மற்றும் நீளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது (width: height).

உதாரணம் : இன்று விடியோவில் பிரபலமாக இருக்கும் 16:9 என்ற அளவு விகிதத்தில், 16 புள்ளிகள் அகலத்தையும், 9 புள்ளிகள் நீளத்தையும் குறிக்கிறது.

1890 ல் வில்லியம் கென்னடி டிக்ஸன் என்பவர் திரையிடலுக்கான அளவு விகிதத்தைக் கண்டறிந்தார். இவர் சினிமாவின் தந்தையாகக் கருதப்படும் தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வரங்கில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர்.

கொடாக் நிறுவனம் செல்லுலாய்ட் ஃபிலிம் தயாரிக்க ஆரம்பித்தவுடன் அதை தாமஸ் ஆல்வா எடிசன் தனது கினடாஸ்கோப்பில் பயன்படுத்த எண்ணினார். பல பரிசோதனை முயற்சிகளுக்குப் பின்பு வில்லியம் கென்னடி டிக்ஸன் 35 மில்லி மீட்டர் ஃபிலிம் அளவைக் கண்டறிந்தார்.

ஒரு ஃபிரேமின் அளவானது 0.95 அளவு அகலமும் 0.735 இன்ச்  நீளமும் கொண்டதாகும் (image size). இதை 1:1.33 என்று கணக்கிட்டார்கள்.

ஃபிலிமின் ஓரத்தில் காணப்படும் நான்கு துவாரங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு ஃபிரேமின் அளவு கட்டமைக்கப்படுகிறது. 1927 ம் ஆண்டு வரை மெளனப்படங்களின் காலகட்டமாக இருந்தது. அப்போது காமிராக்களும் ப்ரொஜெக்டர்களும் 35 மில்லி மீட்டர் ஃபிலிம் பயன்படுத்திவந்தது. அதன் அளவு விகிதம் 1:1.33.

1907 ம் ஆண்டு சினிமா தொழில்நுட்பத்திற்கான பொது விதிமுறை உருவாக்கப்பட்டது (Motion picture patent’s agreement 1907). அதில் முக்கியமானவை ஒரு ஃபிரேமின் அளவு 1:1.33 வடிவத்தில் நான்கு துவாரங்களுக்குள் (4 perforation) உட்படவேண்டும். அந்த துவாரங்களானது ஃபிலிமின் ஓரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். அது காமிரா மற்றும் ப்ரொஜெக்டரில் செலுத்தி இயக்க உதவும்.

திரை வடிவம் எப்படி ஒரு பொது விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டதோ அதேபோல, காமிரா இயக்கத்தின் வேகமும் சீராக்கப்பட்டது. அதாவது மோட்டார் மூலம் காமிராவை இயக்கும் காலகட்டத்திற்கு முன்னர் சினிமா காமிராக்கள் அதில் உள்ள நெம்புகோலை (lever) கைகளால் சுற்றியே ஒளிப்பதிவு காமிரா கருவிகளை இயக்கினர்.

சினிமா காமிராக்களை பொதுவான வேகத்தில் இயக்கவும் பின்னர் ப்ரொஜெக்டரில் அதே வேகத்தில் இயக்க முக்கிய கட்டளைகள் உருவாக்கப்பட்டன. ஒரு நொடிக்கு இரண்டு சுற்று வேகத்தில் காமிராவை இயக்க வேண்டும். அது ஒரு நொடிக்கு சுமார் 16 ஃப்ரேம்களை பதிவு செய்யும். பின்னர், மோட்டாரால் இயக்கும் காமிராக்கள் தயாரிக்கப்பட்டன.

சினிமா பேசும் படமாக மாறும்போதுதான் நொடிக்கு 24 ஃபிரேம்களில் பதிவு செய்வதும் / ப்ரொஜெக்டரை இயக்குவதுமாக மாறியது. இன்றளவும் அந்த விதிமுறை பயன்படுத்தப்படுகிறது.

சில முக்கிய காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு படமாக்கும்போது காமிராவின் ஃபிரேம் ரேட்டை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.

உதாரணம் : ஸ்லோமோஷன் (slow motion) காட்சிக்கு காமிராவின் ஃப்ரேம் ரேட் வேகத்தை கூட்ட வேண்டும். ஆனால், ப்ரொஜெக்டர் என்றும் சீரான வேகத்திலேயே இயக்கப்படும்.

1932 ம் ஆண்டு திரைப்படத்துறையை மேம்படுத்த அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் நிறுவப்பட்டது.

திரைப்படங்கள் பேசும் படங்களான பிறகு ஃபிலிமில் ஒளியைப் பதிவு செய்ய ஒரு ஃபிரேமின் அளவு விகிதத்தை 1:1.37 என்று மாற்றியமைத்தனர். அதுவே பொதுவான விதிமுறையாகக் கொண்டு காமிராக்களும் திரையரங்குகளும் இதன் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டன. இந்த அளவு விகிதம் படமாக்குவதற்கும், திரையிடுவதற்கும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

1950 களில் தொலைக்காட்சியின் வரவையொட்டி மீண்டும் அதற்கேற்றவாறு 4:3 மற்றும் 16:9 போன்ற வடிவங்கள் உருவாயின. தொலைக்காட்சியின் தாக்கம் திரைப்படத்துறையை வெகுவாக பாதித்தது. திரைப்பட ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கவும் வசீகரிக்கவும் அகன்ற திரை (wide screen format) வடிவத்தை உருவாக்கினர்.

குறிப்பாக, 20த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் முதன்முதலாக சினிமாஸ்கோப் என்ற அகன்ற திரை வடிவத்தை 1953 ம் ஆண்டு தி ரோப் (The Robe) திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினர். இந்த சினிமாஸ்கோப் முறையானது 35 எம் எம் ஃபிலிம் மற்றும் காமிராக்களையே பயன்படுத்துகிறது. ஆனால் அகன்ற திரைப்பார்வை கொண்ட அனமார்ஃபிக் லென்சுகளை காமிராவிலும் ப்ரொஜெக்டர்களிலும் பயன்படுத்துகிறது. இதன் அளவு விகிதம் 1:2.35 ஆகும்.

சினிமாஸ்கோப் முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இதனால் திரையரங்குகளில் திரை அளவும் ஃப்ரொஜெக்டர்களும் மாற்றியமைக்கப்பட்டன.

அதன் பிறகு பல அகன்ற பார்வை கொண்ட திரைவடிவங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, சூப்பர்ஸ்கோப், டெக்னிரமா, விஸ்டாரமா, சினிரமா, டாட் ஏ ஓ, விஸ்டாவிஷன், 70 எம் எம், சூப்பர் பேனா விஷன், ஐ மேக்ஸ் போன்றவை மூலமாக ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட அனுபவத்தைக் கொடுப்பதற்காக பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது இவற்றில் சினிமாஸ்கோப்பும், ஐ மேக்ஸும் மட்டுமே இன்றளவில் பயன்பாட்டில் உள்ளன.

சினிமாஸ்கோப் முறை பெரும் வரவேற்பை பெற்றதையொட்டி இந்தியாவில் குரு தத் இயக்கிய காகஸ் கி பூல் என்ற இந்திப்படம் கருப்பு வெள்ளையில் சினிமாஸ்கோப் படமாக 1959 ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை ஒளிப்பதிவு செய்தவர் பால்கே விருது பெற்ற ஒளிப்பதிவு மேதை வி.கே.மூர்த்தி அவர்கள்.

தமிழிலும் 1970 களில் சிவாஜி கணேசன் நடிப்பில் வரலாற்றுப் படமான ராஜ ராஜ சோழன் திரைப்படம் வெளிவந்தது.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படங்கள் 70 எம் எம் மில் உருவாக்கப்பட்டன. இந்தியாவில்  1967 ம் ஆண்டு அரெளண்ட் த வோல்ட் என்ற இந்திப்படம் 35 எம் எம் அளவில் படமாக்கப்பட்டு அதை 70 எம் எம் பிரதிகளாக வெளியிட்டார்கள். அதன் அடிப்படையிலேயே ஷோலே திரைப்படமும் வெளியானது.

தென்னிந்தியாவின் முதல் 70 எம் எம் திரைப்படமாக படையோட்டம் என்ற மலையாளத் திரைப்படம் வெளிவந்தது. ஆனால் அது படமாக்கப்பட்டபோது சினிமாஸ்கோப் முறையிலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

சினிமாஸ்கோப் முறை தமிழில் 70 களிலேயே அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவை பிரபலமானது 80 களின் இறுதியில்தான். அதற்கு முக்கிய காரணம், சென்னை அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களின் தொழில்நுட்ப பங்களிப்போடு ஆபாவாணன் தயாரித்த ஊமை விழிகள் திரைப்படம் (ஒளிப்பதிவு ரமேஷ்குமார்) மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அதன்பின் தயாரான ஏனைய தமிழ்ப்படங்கள் அனைத்தும் சினிமாஸ்கோப்பிலேயே உருவாக வழிவகுத்தது.

70 களில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் 35 எம் எம் ஃபிலிமில் படமாக்கி அதில் 1:1.66 என்ற அகன்ற திரை வடிவத்தை இந்தியாவில் பிரபலமாக்கினார்.

இவ்வடிவத்தில் 35 எம் எம் காமிரா மற்றும் ப்ரொஜெக்டர்களே பயன்படுத்தப்படும். காமிராக்களிலும் ப்ரொஜெக்டர்களிலும் 1:1.66 அளவு விகிதம் கொண்ட ஃபிலிம் கேட்டுகளை பயன்படுத்த வேண்டும்.
சில வெளிநாட்டுத் திரைப்படங்கள் இன்றும் 35 எம் எம் மில் உள்ள 1:1.66 மற்றும் 1:1.85 அளவு விகிதத்தை கலைப்படங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.


  • ஆரம்பகால தொலைக்காட்சி மற்றும் கணிணி  திரை - 1.25:1 (5:4)
  • இன்றைய நவீன ஹெச்.டி. தொலைக்காட்சி மற்றும் கணிணி  திரை – 1.77:1(16:9)

இன்றைய டிஜிட்டல் திரைப்பட யுகத்தில் அகன்ற திரைப்பட அளவானது 1: 2.39 ஆகும்.

திரைப்படத்துறைக்கு ஃபிலிம் பல அளவுகோள்களில் (film gauge) வெவ்வேறு பயன்பாடுகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக, மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது - 8 மில்லி மீட்டர், 16 மில்லி மீட்டர், 35 மில்லி மீட்டர் மற்றும் 70 மில்லி மீட்டர் ஆகும்.



8 மில்லி மீட்டர்
1932 ம் ஆண்டு ஈஸ்ட்மேன் கொடாக் நி றுவனம் பொதுமக்கள் தங்களுடைய தன்னார்வ படைப்புகளை (home movies) உருவாக்க 8 மில்லி மீட்டர் அளவுகோல் கொண்ட ஃபிலிம்களை தயாரித்தது. ஆனால், உண்மையில் 16 மில்லி மீட்டர் அளவுகோல் கொண்டதுதான். அதை 8 மில்லி மீட்டர் சிறிய காமிராவில் இருமுறை பாதியாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

16 மில்லி மீட்டர்
ஈஸ்ட்மேன் கொடாக் நிறுவனம் 1923ம் ஆண்டு அப்போது பரவலாக பயன்படுத்தப்பட்ட 35 மில்லி மீட்டர் ஃபிலிமிற்கு மாற்றாக 16 மில்லி மீட்டர் அளவு கொண்ட ஃபிலிம் சுருள்களை அறிமுகப்படுத்தியது.

16 மில்லி மீட்டர் ஃபிலிம் சுருள்களின் வரவு ஆவணத்திரைப்படங்கள், அறிவியல் சார்ந்த பதிவுகளுக்கு அதிகமாகப் பயன்பட்டது.

பின்னர் 1950 களில் விடியோ காமிரா அறிமுகமாவதற்கு முன்னர் தொலைக்காட்சித் தயாரிப்புகளுக்கு 16 மில்லி மீட்டர் ஃபிலிம்கள் பயன்படுத்தப்பட்டன. தொழில்நுட்ப உதவியோடு 16 மில்லி மீட்டர் மூலம் திரைப்பட தயாரிப்பில் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே வந்தனர். குறிப்பாக, ஆஸ்கர் விருது பெற்ற லீவிங் லாஸ் வேகாஸ் (Leaving Las Vegas) 1995 ல் வெளிவந்தது. தமிழில் சுப்பிரமணியபுரம் (2008) ஆகியவை 16 மில்லி மீட்டர் ஃபிலிம் கொண்டு பதிவு செய்யப்பட்ட படங்கள்.

35 மில்லி மீட்டர்
35 மில்லி மீட்டர் ஃபிலிம்கள் திரைப்படக்கலை ஆரம்பம்தொட்டே உருவாக்கப்பட்டன. திரைப்படத்துறையிலும் புகைப்படத்துறையிலும் இன்றைய டிஜிட்டல் யுகம் வரை மிக அதிகமாக 35 மில்லி மீட்டர் பயன்படுத்தப்பட்டதாகும்.

35 மில்லி மீட்டர் ஃபிலிம் மூலமாக பல திரை வடிவங்கள் உருவாக்கப்பட்டன.



1: 1.33

1:1.66

1:1.85

பிறகு சினிமாஸ்கோப், சூப்பர் 35 மில்லி மீட்டர் என்று பல பரிமாணங்களாக வளர்ந்தது.

70 மில்லி மீட்டர்
70 மில்லி மீட்டர் ஃபிலிம் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படங்கள் அகலப் பார்வை அனுபவத்தை அளித்து உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை வசீகரித்தது.

படமாக்கும்போது 65 மில்லி மீட்டர் காமிராவும் ஃபிலிமும் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. திரையரங்கில் திரையிடலுக்காக 70 மில்லி மீட்டர் பிரிண்ட் ஃபிலிம் பயன்படுத்தினர். அதில் 5 மில்லி மீட்டர் 6 வழி ஒலி (6 track sound) யை உட்படுத்தப் பயன்பட்டது.

70 மில்லி மீட்டர்ஃபிலிம் தயாரிப்பதற்கான முயற்சிகள் 19 ம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டது. பின்னர் 1955 ம் ஆண்டு ஒக்லஹோமா (Oklahoma) திரைப்படத்தில் அறிமுகமாகி பென்ஹர் (BenHur), லாரன்ஸ் ஆஃப் அரேபியா (Lawrence of Arabia) ஆகிய பல திரைப்படங்களில் பிரபலமடைந்த்து. இவ்வெற்றியை தொடர்ந்து பல 70 மில்லி மீட்டர் வடிவங்கள் அறிமுகமாயின.


  • டாட் ஏ ஓ (Todd AO)
  • அல்ட்ரா பானாவிஷன் (Ultra Panavision)
  • எம். ஜி. எம். 70 மில்லி மீட்டர் (MGM 70 mm)
  • விஷ்டாவிஷன் (Vista vision)

ஐ - மேக்ஸ் (I-MAX)
சினிமாவின் தோற்றம்முதலே மிகப்பெரிய திரையில் காட்சிகளைப் பார்க்கும் வண்ணம் தொழில்நுட்ப முறைக்கான தொடர் முயற்சியில் பல அகன்ற திரை வடிவங்களில் குறுகிய காலம் மிகவும் பிரசித்தி பெற்றது சினிரமா (Cinerama) .

மூன்று இணைப்பு 35 மில்லி மீட்டர் காமிராக்களில் படமாக்கி மூன்று இணைப்பு ப்ரொஜெக்டர்கள் மூலம் 146 டிகிரி திரைப்பார்வை கொண்ட பெருந்திரையில் காட்சிகளைப் பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப் பெற்றது.

திஸ் இஸ் சினிரமா (This is Cinerama) என்ற ஹாலிவுட் திரைப்படம் சினிரமா அமைப்பில் 1952 ல் வெளியானது.

இந்தியாவில், பெங்களூருவில் 1968 ம் ஆண்டு கபாலி திரையரங்கம் சினிரமா வசதியுடன் வடிவமைக்கப்பட்டது.

சினிரமா மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு சில திரைப்படங்களே அதன் தொழில்நுட்பத்தோடு தயாரிக்கப்பட்டன.

1970 ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 (Expo 70) தொழில்நுட்ப விழாவில் டைகர் சைல்ட் (Tiger Child) படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐ-மேக்ஸ் திரை ஏறத்தாழ 70 அடி  அகலமும் 50 அடி உயரமும் கொண்ட அமைப்பாகும். ஐ-மேக்ஸ் 35 மில்லி மீட்டர் திரை வடிவத்தை காட்டிலும் 6 மடங்கு அடர்த்தியான காட்சித்தன்மையுடன் விளங்குகிறது.

2002 ம் ஆண்டு முதல் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்படும் சில திரைப்படங்கள் ஐ-மேக்ஸ் தன்மைக்கு ஏற்றவாறு பிரிண்ட் செய்யப்பட்டு வெளியாகவும் செய்துவருகிறது.

முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு சினிமா மாறிவருவதை உன்னிப்பாக கவனித்த ஐ-மேக்ஸ் நிறுவனம் 2008 ம் ஆண்டில் தனது ஐ-மேக்ஸ் டிஜிட்டலில் திரையிடுவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இரண்டு ப்ரொஜெக்டர்கள் மூலம் 2000 பிக்சல் திறனுடன் (2k) காட்சிகளை திரையிடும் உத்தியைக் கொண்டது. இதில் 3டி (3D) முறையிலும் திரையிடலாம்.                                                                                                    




Author:
சி.ஜெ. ராஜ்குமார்
ஒளிப்பதிவு இயக்குநர்

You Might Also Like

1 comments

  1. Excellent Article. Thanks for sharing.

    ReplyDelete