Film Archives: இன்றே கடைசி

10:11:00



1916 ஆம் ஆண்டு திரு.ரங்கசாமி நடராஜ முதலியார் எடுத்த ‘கீசக வதம்’ திரைப்படத்தின் வாயிலாகத் துவங்குகிறது தமிழ் சினிமாவின் வரலாறு. (கீசக வதம், 1918 ஆம் ஆண்டுதான் வெளியாயிற்று. நடராஜ முதலியார் தன் நிறுவனத்தை துவங்கிய ஆண்டு தான் 1916. அதனால் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு 2018 தான் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது) உலகின் முதல் பேசும் படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer) 1927 ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதிலிருந்து நான்கே ஆண்டுகளில் தமிழின் முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’ (1931) திரு.H.M.ரெட்டி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழின் முதல் திரைப்படம் வெளிவந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. காளிதாசுக்கு பிறகு, இத்தனை ஆண்டுகளில் வெளிவந்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும் என்கிறது விக்கிப்பீடியா. பல இயக்குனர்களை, ஒளிப்பதிவாளர்களை, இசையமைப்பாளர்களை, நடிகர்களை, தொழில்நுட்ப வல்லூநர்களைக் கடந்து வந்திருக்கிறோம். சிறப்பான பல திரைப்படங்களை அவர்களின் படைப்பாக்கத்தால் பெற்றிருக்கிறோம். திரையுலகின் வாயிலாக எண்ணற்ற தலைவர்களை தமிழகம் அடைந்திருக்கிறது. கணக்கில் அடங்கா ரசிக சிகாமணிகளை உற்பத்தி செய்திருக்கிறது தமிழ் சினிமா. பாலபிஷேகத்தில் ஆரம்பித்து, அலகு குத்தி காவடி எடுப்பது வரைக்கும் செல்லக்கூடிய, மகா ரசிகர்களைப் பெறும் பாக்கியத்தை அருளவல்ல விஷேச தன்மை வாய்ந்தது நம் தமிழ்த் திரையுலகம். ஆயினும், அதன் வரலாற்றுச் சுவடைத் திரும்பிப்பார்க்க எந்தனிக்கும்போது ஒன்று புலனாகிறது. அதற்கென்று ஒரு வரலாற்று சுவடே இல்லை என்பதுதான் அது.

ஒரு துறையின் வரலாறு என்பது என்ன? அது கடந்து வந்த பாதையா? அது படைத்திட்ட மாற்றமா? அல்லது  நிகழ்வா? எது? எது வரலாறு என்று கருதப்படும்? எந்தத்துறையானாலும் அது கடந்து வந்த பாதையில் படைத்திட்ட நிகழ்வும் அது ஏற்படுத்திய மாற்றமும், அதன் தொடர்ச்சியாக அத்துறை அடைந்த வளர்ச்சியும் அதன் வரலாற்றை பறை சாற்றும். எனில், தமிழ் திரையுலகின் வரலாற்று சுவடு என்ன? கீசகவதத்தில் துவங்கி நேற்றைய கபாலி வரைக்குமான அதன் படைப்புகளாகத்தான் இருக்க முடியும் அல்லவா? அதன் படைப்புகள்தான் அதன் வரலாற்று ஆவணம் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறதுதானே? ஆவணங்கள்தான், ஒரு வரலாற்றின் சுவடைத் அறியத்தருகின்றன எனில், தமிழ் திரையுலகின் ஆவணங்கள் எங்கே? இதற்கு பதில் சொல்லுவதற்கு முன்பாக, அப்படி ஒன்று இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டும். தேடினால், அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதைத்தான் பதிலாகப் பெற முடிகிறது.

இது தமிழனின் ஒருவகையான குணம். அல்லது அவனுக்கு அருளப்பட்ட சாபம். வாழ்வியல் சார்ந்த வரலாறாகட்டும், மொழி சார்ந்த வரலாறாகட்டும், துறைச்சார்ந்த வரலாறாகட்டும் எதன் மீதும் அவனுக்கு பிடிப்பு இருந்ததில்லை. மதிப்பு இருந்ததில்லை. அதைப்பற்றிய சிறு பிரக்ஞை கூட இருந்ததில்லை. உலகம் தன் வரலாற்றைப் பதிவு செய்யவும், அதைத் தன் தலைமுறைகளுக்கு கற்பித்தும் வரும் அதே வேளையில், தன் வரலாற்றைத் தவற விட்டவன் தமிழன். அந்த நிலைதான் இங்கேயும்.

சரி, சுற்றி வளைத்து பேசுவது எதற்கு?! நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகளில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் எத்தனை படைப்புகள் காலத்தை கடந்து நிற்க கூடிய தகுதி கொண்டவையாக இருக்க முடியும்? அது கலைப்படைப்போ, வெகுசன படைப்போ எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். மொத்தம் எத்தனை திரைப்படங்கள் தேறும்? சில நூறு படங்கள்?

இருக்கலாம். நூற்றுக்கணக்கில்தான் அவை இருக்க முடியும். இன்னும் கொஞ்சம் வடிகட்டினால் நூறுக்கு குறைந்தாலும் குறையலாம். அவ்வளவுதான். இவைதான் தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சுவடுகள் அல்லது வரலாற்று ஆவணங்களாக இருக்க முடியும். சரிதானே?!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்.. இத்தகைய சிறு எண்ணிக்கையிலான சில நூறு படங்கள் கூட இன்று நம் பார்வைக்குக் கிடைப்பதில்லை என்பதுதான். ஆமாம். கீசகவதத்தை விட்டுவிடுங்கள், காளிதாஸை விட்டு விடுங்கள் அதன் பின் வந்த எத்தனை படங்களை, நாம் விரும்பினால் இன்று பார்த்து விட முடியும் என்கிறீர்கள்? அவை பத்து இருபதைக்கூட தாண்டாது. அப்படிக் கிடைப்பவையும் தரமற்றவையாகத்தான் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஏற்ற வகையில் ‘டெலிசினி (Telecine)’ செய்யப்பட்ட காணொளிகளைத்தான் இன்று நம்மால் பெற முடிகிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகியிருக்கக் கூடிய HD, Buleray போன்ற தரமான காணொளி வடிவங்களைப் பெற முடியவில்லை. காரணம், அப்படி ஒன்று தயார் செய்யப்படவே இல்லை. உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நான் எதைப்பற்றி பேச வருகிறேன் என்பது. ஆமாம், இன்று நாம் விரும்பினால் கூட, தமிழ்த் திரையுலகின் கடந்த கால சிறந்த படங்களை பார்க்க முடியாது. அவை பாதுகாத்து வைக்கப்படவுமில்லை, அடுத்த தலைமுறைக்கு சேமித்து வைக்கப்படவுமில்லை. ரொம்ப தூரம் ஏன் போவானேன்? சில வருடங்களுக்கு முந்தைய திரைப்படங்களுக்கும் கூட அதேதான் நிலை!

காலம் சென்ற மகா கலைஞன் பாலுமகேந்திரா இதைப்பற்றி பேசிக்கொண்டே இருந்தார். தமிழ்த் திரையுலகத்திற்கென ‘திரைப்படக் காப்பகம்’(film archive) ஒன்று வேண்டும் என்றும் அதை காலம் கடத்தாது நிறைவேற்றிவிட வேண்டும் என்று போகும் இடமெல்லாம் நினைவுறுத்திக் கொண்டிருந்தார். இந்தியாவில் 1964 - ஆம் ஆண்டு ‘The National Film Archive of India’ துவங்கப்பட்டது. பூனேவிலிருந்து செயல்படும் அக்காப்பகம், இந்தியாவின் சிறந்தப் படங்களைப் பாதுகாத்து, சேமித்து வருகிறது. தேசிய விருது பெற்றப்படங்கள், அயல்நாட்டு திரைப்படவிழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டப்படங்கள், அங்கே விருது வாங்கியப் படங்கள், பெரும் வணிக வெற்றிப்பெற்றப் படங்கள், சிறந்த ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து பாதுகாத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இதே போன்று காப்பகங்கள் பல உண்டு. பெரும்பாலும் எல்லாப்படங்களையும் அவர்கள் சேமித்து வைக்கிறார்கள். டிஜிட்டல் மயமாகிவிட்ட இக்காலகட்டத்தில், தங்களுடைய அத்துணைப்படங்களையும் 'HD' படங்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இணையத்தில் தேடிப்பாருங்கள். ஆரம்ப காலம் முதல் இன்று வரை, எந்தப் படம் வேண்டுமானாலும் கிடைக்கும்.

ஆனால்.. இங்கே? தமிழ் திரையுலகத்திற்கென்று எதுவுமில்லை. அதற்கான முயற்சி கூட இல்லை. பாலுமகேந்திராவின் படங்களைக்கூட இன்று நம்மால் தரமான பிரதியாகப் பார்க்க முடியாது. இதை அவரே மிகுந்த வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார். தேசிய விருது பெற்ற அவருடைய படமான ‘வீடு’ திரைப்படத்தின் நல்ல பிரதியை இன்று நாம் பெற முடியாது. செல்லுலாயிடில் கூட வேண்டாம். டிஜிட்டல் வடிவில் கூட அப்படத்தின் நல்ல பிரதி கிடைப்பதில்லை. நான் பல வருடங்களாக ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் நல்ல பிரதியை தேடி வருகிறேன், இன்று வரை கிடைத்த பாடில்லை.

நமக்கு அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லை. அதைப்பற்றி பிரக்ஞையே இல்லை. குறைந்த பட்சம் நூறு படங்களைக்கூட நம்மால் சேமித்து வைக்க முடியவில்லை. அதை சேமித்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்குமானால், சேமித்து வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தோமானால், அதை இப்போதே செய்ய வேண்டும். காரணம். காலம் கடத்தினால் அதற்கு சாத்தியமில்லாமல் ஆகிவிடும். திரைப்படங்களின் மூல ‘நெகட்டிவை’(film negative) சேமித்து வைப்பது ஒருவகை எனில், திரையிடலுக்கு தயாரிக்கப்பட்ட பிரதியை (Release print) சேமித்து வைப்பது மற்றொரு வகை. தற்போதைய டிஜிட்டல் வளர்ச்சியில் திரைப்படங்களை டிஜிட்டலாக சேமித்து வைப்பது என்பது புதிய தொழில்நுட்பம். நெகட்டிவையோ அல்லது பிரதியையோ ‘ஸ்கேன்’ செய்து ‘Digital Files'-ஆக சேமித்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பிரதி எடுத்துக்கொள்ள முடியும்.

அதே நேரம், இன்று பலப்படங்களுக்கு ‘நெகட்டிவோ’(film negative) அல்லது அதன் பிரதியோ (Release print) கிடையாது. பெரும்பாலானவை காலம் கடந்தவையாகிவிட்டன. தேடினால், முயன்றால் சில படங்களை நாம் சேமித்து விட முடியும். அதையும் இன்றே துவங்க வேண்டும். காலம் தாழ்த்த முடியாது. என்ன காரணம்?.. விளக்குகிறேன்.

பொதுவாக வெளியாகிவிட்ட ஒரு திரைப்படத்தின் மூல நெகட்டீவ் அல்லது திரையிடலுக்காக எடுக்கப்பட்ட பிரதிகள், அதன் தேவை முடிந்த பிறகு, அதாவது அத்திரைப்படங்களைத் திரையரங்கில் இருந்து எடுத்து விட்ட பின், அப்படம் தயாரித்த நிறுவனத்திடமிருக்கும். அந்நிறுவனம், அவற்றை, அத்திரைப்படத்தை உருவாக்கிய ‘லேப்பில்’ (Film Lab) வைத்திருப்பார்கள். ஒவ்வொரு திரைப்பட லேபும் தனக்கென ஒரு குளிரூட்டப்பட்ட காப்பகத்தை (vaults) வைத்திருப்பார்கள். அந்த அறையில் தயாரான திரைப்படங்களின் மூல நெகட்டீவ்கள், பிரதிகள் போன்றவற்றை பாதுகாத்து வைப்பார்கள். அதற்குத் தேவையான வாடகையை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்துவிட வேண்டும். ஆனால் பல வருடங்களாக அப்படி எதுவும் நடப்பதில்லை. காரணம், இன்று தொடர்ச்சியாக திரைப்படமெடுக்கம் நிறுவனங்கள் எதுவுமில்லை. மேலும் இன்றைய தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய பிரதிகளை சேமித்து வைக்க வேண்டும் என்று புரிதலே இல்லை. ஆயினும், மூல நெகட்டீவ்கள் லேபுகளிலேயே தங்கி விடுவதும் உண்டு. நானே கண் கூடாக பார்த்திருக்கிறேன். பலப்படங்களின் பிரதிகள், நெகட்டீவ்கள் லேபுகளில் இருப்பதை. அவற்றை அதன் தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதே இல்லை. குறைந்தது, பத்திலிருந்து முப்பது வருடங்களில் வெளிவந்த திரைப்படங்களின் நெகட்டீவ்கள் மற்றும் பிரதிகள் இத்தகைய லேபுகளில் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. சொல்லப்போனால் அவை கேட்பாரற்றுக் கிடக்கின்றன என்பதுதான் நிஜம். அத்தகைய லேபுகள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன.

இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற ‘பிரசாத் லேப்’ மூடப்பட்டு விட்டது. தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பல சிறந்த படங்கள், இந்த லேபில்தான் பிற்தயாரிப்புப் பணிகள் செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலான படங்களின் பிரதிகள் அங்கே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதேப்போல ‘ஜெமினி லேப்’, அதன் பணிகளும் நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் தொழிற்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது. எனில், இப்போது செயல்பட்டால் தான், அத்தகைய நெகட்டீவ்களை, பிரதிகளை நாம் மீட்டெடுக்க முடியும். இல்லை என்றால், மூடப்பட்டுவிட்ட லேபுகளிலிருக்கும் நெகட்டீவ்களும், பிரதிகளும் பாழடைந்துவிடும். இது ஒரு காரணம்.

செல்லுலாயிட் படச்சுருளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படங்களை டிஜிட்டலாக மாற்ற ‘Film Scanner' என்றொரு கருவி உண்டு. இக்கருவியைக்கொண்டு நெகட்டிவ் மற்றும் திரையிடலுக்கான பிரதியிலிருந்து டிஜிட்டல் பிரதியை பெற முடியும். அதாவது ‘ஸ்கேன்’ செய்து டிஜிட்டல் கோப்புகளாக மாற்றமுடியும். அந்த டிஜிட்டல் கோப்புகளைத்தான் வண்ணம் ஒழுங்கமைத்து டிஜிட்டல் திரையிடலுக்கான பிரதிகளை தயாரிக்கின்றனர். அந்த ஸ்கேனர்கள் இன்று பயனற்றுப் போய்விட்டன. காரணம், அதேதான். எப்படி டிஜிடலின் வரவால் லேபுகள் பயனற்று மூடப்பட்டனவோ, அதுபோலவே இந்த ஸ்கேனர்களுக்கும் வேலையில்லாது போய்விட்டது. ஆயினும் இன்று சென்னையில்/ இந்தியாவில் சில ஸ்கேனர்கள் இருக்கின்றன. எல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வாங்கியவை. அவை எல்லாம் இன்று பயனற்று வெறுமனே இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதை நான் பல டிஜிட்டல் தொழிற்கூடங்களில் பார்த்திருக்கிறேன். பல கோடி கொடுத்து வாங்கிய கருவிகளை என்ன செய்வது என்று தெரியாமல் பல இடங்களில் அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். விரைவில் அவை காயலான் கடைகளுக்கு போய் விடக்கூடிய சாத்தியம் அதிகம். இவை இருக்கும் வரை தான் நாம் முந்திய காலத்து செல்லுலாயிட் படங்களை டிஜிட்டல் கோப்புகளாக மாற்ற முடியும். இது இரண்டாவது காரணம்.

மிக விரைவாக செயல்பட்டு, மூடப்பட்ட லேபிலிருந்து தேவையான திரைப்படங்களை மீட்டெடுக்க வேண்டும். அவற்றை டிஜிட்டல் கோப்புகளாக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் உடனே நடக்க வேண்டும். காலம் தாழ்த்த முடியாது என்பதை புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் சிறந்த படங்களைத் தேர்வு செய்யவேண்டும். அதன் தயாரிப்பாளர்களை அணுகி அவற்றின் இன்றைய் நிலையை அறிய வேண்டும். கிடைத்த படங்களின் நெகட்டீவ்களை சேகரிக்க வேண்டும். அல்லது பிரதிகளையாவது சேகரிக்க வேண்டும். அதனை இன்று மூடப்பட்டிருக்கும் லேபுகளை பயன்படுத்திதான் ‘சுத்தம்’(film cleaning / film restoration) செய்யமுடியும். அதாவது டிஜிட்டல் கோப்புகளாக மாற்றுவதற்கு முன்பாக செல்லுலாயிட் பிரதியை/ நெகட்டீவை தூசு/அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அதிலிருக்கும் சிராய்ப்புகளை மறைக்க ‘3m’ கோட்டிங் என்றொரு பூச்சை அதன் மேல் பூசுவார்கள். இதன் மூலம் தரமான டிஜிட்டல் கோப்புகளை பெற முடியும். ஆகவே, மூடப்பட்ட லேபுகளில் இருக்கும் கருவிகள் பாழடைந்து போவதற்கு முன்பாக நாம் இதைச் செய்தாக வேண்டும். காலம் கடத்தாது உடனடியாக செயல்பட துவங்க வேண்டும். இதற்குத் தேவையான பணத்தை, அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டும் அல்லது திரைத்துறையினரே தங்களுக்குள் வசூல் செய்யலாம். அதிகம் தேவைப்படாது. சில கோடிகள்தான் தேவைப்படும். கோடிகளில் புரலும் கோடம்பாக்கம் அதனைப் பகிர்ந்துக் கொள்ள முடியும். திரைப்பட சங்கங்கள் அல்லது திரைத்துறையைச் சார்ந்த யார் வேண்டுமானாலும் இதற்கான முயற்சியைத் துவங்கலாம்.

அதேப்போன்று முக்கியமான மற்றொரு வேலையும் இருக்கிறது. அது, நம்முடைய மூத்த கலைஞர்களின் நேர்காணலைப் பதிவு செய்வது. இங்கே, மூத்த கலைஞர்களின் அனுபவமும் அறிவும் பதிவு செய்யப்படுவதே இல்லை. அயல் நாடுகளில் பாருங்கள். அத்தனை கலைஞர்களின் அனுபவம் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் காணக்கிடைக்கிறது. அவை நம்மைப்போல எத்தனைக் குத்து பாட்டு வைத்தோம், எந்த எந்த நாடுகளுக்கெல்லாம் போனோம் என்பதைப்போன்று கேள்வி பதிலாக இல்லாமல், தொழில்நுட்ப ரீதியானதாக, கலைத்தன்மை வாய்ந்ததாக, படைப்பாற்றலை விளக்குவதாக இருக்கின்றன. அதைப்போன்றதொரு நேர்காணலை நாம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். நம்முடைய பல படைப்பாளிகள் தங்களின் இறுதி காலத்திலிருப்பதை நாம் உணரவேண்டும். வருடம் தோறும் சில படைப்பாளிகளை இழந்து வருகிறோம். அண்மையில் பாலுமகேந்திராவை இழந்தோம். அவரைப்பற்றியும் அவரின் படைப்பாளுமைப்பற்றியும் சரியானதொரு ஆவணம் நம்மிடையே கிடையாது. இதையும் திரைப்பட சங்கங்கள் அல்லது திரைப்பட ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும்.

அது ஒரு துறையோ அல்லது ஒரு நாடோ தன் வரலாற்றை பதிவுசெய்வதும், அதன் வழி படிப்பினை பெறுவதும், அதன் முன்னேற்றத்திற்கான காரணிகளில் ஒன்று. அவ்வகையில் தமிழ்த் திரையுலகம் தன் முன்னோர்களின் அனுபவத்தை பாடமாகக் கொள்ள வேண்டும். அதற்குப் படைப்புகளும் அதனை படைத்திட்ட கலைஞர்களின் சொல்லும் இன்றியமையாததாக இருக்கும் என்பதை காலத்தே உணர்ந்து உடனடியாக செயல்பட துவங்க வேண்டும்.



Author :
Vijay Armstrong
Cinematographer

You Might Also Like

0 comments