பாலு மகேந்திரா: எனது படம்தான் எனது ஆவணம்

07:07:00



தமிழ் திரையுலகில் ஓர் இயக்குநர் பணியைத் தாண்டி மகேந்திரன், மணிரத்னம் ஆகிய இரண்டு மேதைகள் உருவாக பாலு மகேந்திரா பக்கபலமாக இருந்திருக்கிறார் என்று இயக்குநர் மிஷ்கின் பெருமிதத்துடன் பேசினார்.

இந்திய சினிமாவின் போற்றத்தக்க இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.

பாலு மகேந்திராவின் மனைவி, மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், நடிகை அர்ச்சனா, இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் பாமரன், தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் பாலு மகேந்திரா குறித்தும் அவரது படைப்புகள் பற்றியும் பேசினர்.

இயக்குநர் மிஷ்கின்:

"எனக்கும் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு இடையேயான பழக்கம் ரொம்ப கம்மி தான். தமிழ் திரையுலகில் ஓர் இயக்குநராக அவருடைய பணியைத் தாண்டி இரண்டு மேதைகள் உருவாக பக்கபலமாக இருந்திருக்கிறார். ஒன்று மகேந்திரன், இன்னொன்று மணிரத்னம்.

பாலு மகேந்திரா அவர்களுடன் எனது வாழ்க்கையில் ஒரு 8 மணி நேரம் இருந்திருப்பேன். அவரை நான் சந்தித்த போது "என்ன புத்தகம் படிக்கிறீங்கப்பா" என்று தான் கேட்டேன். அவர் படிக்கும் புத்தகங்கள் குறிப்பிட்டு விட்டு நீ என்ன படிக்கிற என்று கேட்டார்.

தமிழ் சினிமாவில் சினிமாவை அதற்கே உரிய வடிவமாக பார்த்தவர் பாலு மகேந்திரா மட்டுமே. சினிமாவை மூவிங் இமேஜஸாக கச்சிதமாக பார்த்தவர்கள் என்றால், இந்தியாவில் சத்யஜித்ரேவுக்கு பிறகு பாலு மகேந்திரா தான் என்பதை பெருமையாகச் சொல்வேன்.

பாலு மகேந்திரா அவர்களிடம் நான் முக்கியமாக கற்றுக் கொண்டது எங்கே கேமரா நகர வேண்டும் என்பதையே. நான் சினிமா பார்க்கும் போது என் அறிவுக்கு சினிமா எப்படிப்பட்டது என்றுதான் பார்ப்பேன். ஆனால், ஆளுமைகள் சினிமாவை ஒரு வடிமாகத்தான் பார்த்தார்கள். அவரை தவிர தமிழ் சினிமாவில் வடிவத்தைப் பற்றி நான் பேசி கேட்டதே இல்லை.

அதெல்லாம் எதுக்கு சார், மக்களுக்கு கதைச் சொன்னால் போதும் என்று கூறுவதை நான் முட்டாள்தனமாக பார்க்கிறேன். சினிமா என்பது ஒரு வடிவம் என்று சாகும் வரைக்கும் பேசிக் கொண்டே இருந்தார் பாலுமகேந்திரா சார். நிறைய பேருக்கு அவர் பேசுவது புரியாது. சினிமா வடிவத்தைப் பற்றி பேசுவதற்கு கிட்டதட்ட 30 வருடங்கள் செலவழித்திருக்க வேண்டும்.

எனது அலுவலகத்திற்கு வரும் போது, "ஏன்டா கேமிராவை நகற்றினாய்.. நீ ஃபீல் பண்ணினா நகற்றிவிடுவாயா" என்று கேட்பார். இப்போது பீலிங் சார் என்று சொல்வது எல்லாம் பொறுக்கித்தனமான வார்த்தை. ஒரு கேமரா நகரும் போது எங்கே, எப்போது, ஏன் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சினிமவில் ஃப்ரேம் என்பது ஒரு சிறைதான். ஒரு சிறைக்குள் நாலைந்து கதாபாத்திரங்கள் உள்ளே கிடக்கிறது. இன்று நாயகர்களை பேசவிட்டு 70 எம்.எம்மில் க்ளோஸ்-அப் வைத்திருப்பார்கள். 75% இந்திய சினிமாக்கள் க்ளோஸ்-அப் காட்சிகள் வைத்து உருவாக்கப்படுகின்றன. மூன்றரை மணி நேர படமான 'செவன் சாமூராய்' படத்தில் மொத்தமே 12 க்ளோஸ்-அப் காட்சிதான்.

பாலு மகேந்திரா சார்தான் க்ளோஸ்-அப் காட்சி எங்கு, எப்படி வைக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கிறார். ஓர் இயக்குநருக்கு க்ளோஸ்-அப் காட்சி வைக்க கற்றுக்கொள்ள 20 வருஷமாகும். எனக்கு இன்னும் க்ளோஸ்-அப் காட்சி வைக்க தெரியாது. அதனால் நான் க்ளோஸ்-அப் காட்சிகளே வைப்பதில்லை. ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டுமே க்ளோஸ்-அப் காட்சி வைக்க தெரியும். க்ளோஸ்-அப் என்பது ஒரு மர்மமான சாதனம்.

பாலு மகேந்திரா சார் இல்லாமல் ஓர் அனாதைப் போல் உணர்கிறேன். இப்போது யார் இருக்கிறார்? மேதைகள் இறப்பதே இல்லை. அவர்கள் நமக்கு தினமும் உணவளித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவருடன் நிறைய நேரம் என்னால் செலவழிக்க முடியவில்லை.

ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவோ சொல்லிக் கொடுத்திருப்பார். அவருடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களிடம் உட்கார்ந்து என்ன சொன்னார் என்று கேட்க வேண்டும். அவருடன் பணியாற்றியவர்களுடைய அனுபவங்களைப் பேட்டியாக எடுத்து புத்தகமாக பதிப்பிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்றார் மிஷ்கின்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார்:

"பாலுமகேந்திரா அவர்களை வைத்து ஓர் ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நானும், பாலாவும் பேசிக் கொண்டிருப்போம். அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. என்னைப் பற்றி எதுக்கு ஆவணப்படம், எனது படம்தான் எனது ஆவணம் என்றார். 'தலைமுறைகள்' படத்தின் சசிகுமார் கதாபாத்திரத்தை என்னைப் பண்ணச் சொன்னார். ஆனால் நான் பண்ணமாட்டேன் என்று சொன்னது எனக்கும், அவருக்குமே வருத்தம்.

சினிமா ஆர்வலர் தனஞ்ஜெயன்:

"எந்த ஒரு புதிய படமாக இருந்தாலும் சரி, அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும் சரி பாலுமகேந்திரா சாரிடம் போய் நீங்கள் வர வேண்டும் என்று தெரிவித்தால் போதும் எவ்வளவு சிரமத்தில் இருந்தாலும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். சார்.. 9 மணிக்கு என்று போட்டிருப்பார்கள் ஆனால் 10 மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொன்னால் கூட சரியான நேரத்திற்கு அனைவருக்கும் முன்பாக வந்து அமர்ந்திருப்பார். பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் பார்த்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு செல்லும் ஆசான் பாலுமகேந்திரா சார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்:

"நான் மீண்டும் நடிக்க உத்வேகம் கொடுத்ததே பாலு சார் தான். அவரிடம், பாலசந்தர் சாரிடமும் பணிபுரிய ஆசைப்பட்டேன். ஒருவேளை அவரிடம் பணிபுரிந்திருந்தால் நான் மசாலா படம் இயக்குநராக ஆகியிருக்க மாட்டேன். காசு சம்பாதித்தேன், ஆனால் பெயர் சம்பாதிக்கவில்லை. அவரிடம் பணியாற்றாதது ஒரு குறை தான். அவருடைய படங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் நாம் நல்ல இயக்குநராகி விடலாம்.

'தலைமுறைகள்' படத்துக்குப் பிறகு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், "நான் இன்னும் 3 படங்கள் இயக்க இருக்கிறேன். நான் சுவாசிப்பதே சினிமா தான்" என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து நான் நடிக்க ஆரம்பித்தேன்."

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:

"திரையுலக மாணவர்கள் போல பாலுமகேந்திரா அவர்களுக்கு இலக்கியத்திலும் நிறைய மாணவர்கள் இருக்கிறோம். அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி. புத்தகங்கள் எல்லாம் படித்துவிட்டு, அதன் எழுத்தாளருக்கு உடனடியாக ஒரு பாராட்டு கடிதம் அனுப்புவார். அவருடைய மாணவர் ஒருவர் எனது கதையை குறும்படமாக எடுக்க ஆசைப்படுவதாக என்னிடம் கேட்டார். ஒன்றும் பிரச்சினையில்லை பண்ணிக் கொள்ளுங்கள் என்றேன். அப்படி எல்லாம் இல்லை, நானே அவரை உன் வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்று அழைத்து வந்தார். அக்கதைக்கு நீ எழுதிய திரைக்கதையை இவரிடம் கொடுத்து ஒப்புதல் வாங்க வேண்டும் என்று அந்த உதவி இயக்குநரிடம் சொன்னார். மாமேதைக்கு இலக்கியத்திற்கு மீது இருந்த மதிப்புக்கு இது ஓர் உதாரணம்."




நன்றி: தமிழ் இந்து

You Might Also Like

0 comments